Thursday, April 12, 2012

பிறர் உயர்வை பார்த்து மகிழ்வோம்.


       ஒரு அன்பர் வெளியூரிலிருந்து வந்து மகரிஷியை சந்திக்க வேண்டும் என்று ஆழியாரில் ஆவலாய் காத்திருந்தார். மகரிஷி அவர்கள் மாலைதான் அன்பர்களை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார்கள். ஆனால் இவரோ தன்அவசர வேலை, செல்ல வேண்டிய து£ரம் கருதி எப்படியாவது மகரிஷியை சந்திக்க வேண்டும் என்கிறார். அவருடைய நிலையை உணர்ந்து, முன் அனுமதி பெற்று அவரை மகரிஷி அவர்களிடம் அழைத்துச் சென்றனர்.

அவருடைய சந்தேகங்களுக்கு அருட்தந்தை அவர்கள் விளக்கம் அளித்துக் கொண்டுள்ளார்கள். விளக்கம் அளிக்கும்பொழுதே யாருடைய மனதையும் ஊடுருவி பார்ப்பவராயிற்றே, பேசிக் கொண்டே வரும்போது பொறாமையை விட வேண்டும் என்கிறார்கள்.

“ பொறாமை என்பது பிறர் நலத்தை, உயர்வை பொறுக்க முடியாத ஓர் உணர்வு. பொறாமை ஏற்பட்ட நெஞ்சத்தவனுக்குத் தான் எவ்வளவு சிறப்பாக வாழ்ந்தாலும் அதில் திருப்தி ஏற்படாது. பிறருடைய நிலையைக் கண்டு பொறாமைப் பட்டுக் கொண்டே இருப்பதால் தனது ஆற்றல் குறைந்து, கடமை மறந்து, நாளடைவில் பயனற்றவன் ஆகிவிடுவான்.
மேலும் அவனுடைய முயற்சியில் பெரும்பகுதி பிறருடைய இன்பங்களைக் கெடுத்து துன்பத்தை விளைவிக்கவே செலவாகிக் கொண்டு இருக்கும். அது சமுதாயத்தில் மக்களுக்கு பலவித துன்பங்களை தோற்றுவிக்கும். நல்வாழ்வை விரும்பும் எவரும் தன்னிடம் பொறாமை என்பது ஏற்படும்போதே அதனைக் கூர்ந்தறிந்து போக்கிக் கொள்ள முயல வேண்டும்” என்கிறார்கள்.

நான் இதை எனக்கே கூறியதாக எடுத்துக் கொண்டு பிறர் உயர்வைப் பார்த்து மகிழ, தவறுகளை மன்னிக்க பயிற்சியைத் துவக்கினேன்.       
                                                - அருள்நிதி எம். கே. தாமோதரன், திண்டுக்கல்.

No comments:

Post a Comment