சுழற்தட்டு விளையாட்டில் சுற்றிவிட்டோன் பெறல்போல்
சொல் எண்ணங்கள் செயல்கள் காந்த அலையாகி
சுழன்றோடி விரைவு ஒக்கச் சென்று முடிவான
சுத்தவெளி அழுத்தத்தால் பின்னோக்கி வந்து
சுழன்றியங்கும் சீவகாந்தக் கருமையம் ஈர்த்து
சுருக்கி இருப்பாய் வைத்துக் காலத்தில் மலர்ந்தும்
சுழற்சி ஈர்ப்புக் காப்புன் திருவிளையாட்டென்று
சொல்லாமல் விளக்கிவிட்ட சொற்கடந்த பொருளே.
- ஞானக்களஞ்சியம் 1658
இறைவா! உன்னுடைய திருவிளையாடல்களைக் கண்டும் உணர்ந்தும் பேரின்பம் அடைந்து கொண்டிருக்கிறேன். மனிதன் பிறர் மீது பகையுணர்வு கொள்கிறான். அவனை அழிக்கும் கருத்தோடு எண்ணத்தில் திட்டமிடுகிறான். பேராசை, சினம் முதலிய ஆறு குணங்களாகி அவற்றின் எண்ண அலைகளை வீசுகிறான். அதேபோல மற்றொருவன் பிறருக்கு நன்மை செய்ய எண்ணுகிறான். நினைந்து வாழ்த்துகிறான்.

சுழல்தட்டு விளையாட்டில் தட்டு போன்ற கருவியைச் சுழற்றி வீசுகிறான் ஒருவன். அந்தக் கருவி (Boomerang) அவன் வீசும் விரைவுக்கேற்ப ஓடிச் சென்று பின்னர் திரும்பி அவனிடமே சேருகினறது.
அதுபோல ஒருவனிடமிருந்து எழும் எண்ண அலைகள், வான் காந்த வெளியில் மிதந்து ஓடுகிறது. வான் காந்தத்தில் உள்ள இருப்பு நிலையாக உள்ள நீ உன் அழுத்ததத்தால் அந்த அலையை வளைத்து அதற்கு வட்ட அமைப்பைக் கொடுக்கிறாய். அந்த அலைக்கு அத்தகைய திருப்பம் வந்த போது, தான் புறப்பட்ட இடத்தை நோக்குகிறது.
அப்போது அவ்வெண்ண அலையை வெளியிட்டவனது கருமைய ஈர்ப்பு அதை தன்வசம் இழுத்து சுருக்கி இருப்பாக்கி வைத்துக் கொள்கிறது என்ற உண்மையினை அகக்காட்சியாகக் காட்டி எனக்கு உனது வினை விளைவு நீதியை அறிவித்த பெருங்கருணையைப் போற்றுகிறேன்.
- மகரிஷி
No comments:
Post a Comment