உள்ளத்திலே ஒரு நிறைவு ஏற்பட வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ‘அளவு’ ஒன்று ‘முறை’ ஒன்று என்று வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அளவு முறை மீறும் போதுதான் துன்பம் உண்டாகிறது. இந்த அளவு முறை (Limitation and Method) இரண்டையும் கடைப்பிடித்தால் அதுதான் துறவு. இந்தக் கருத்தைத்தான் நான் ஒரு கவியில் எழுதியுள்ளேன். “உறவிலே கண்ட உண்மைநிலைத் தௌ¤வே துறவு எனப்படும்” என்று.
இந்த உறவிலே நான் பயிற்சி செய்து பார்த்த பிறகுதான் உங்களிடம் சொல்கிறேன். நான் எந்த ஊருக்கு வந்தாலும் பரிவோடு எனக்கு உணவு தரப் பலர் காத்திருக்கின்றார்கள். அவர்களது ஆர்வம், உள்ளன்பு, செய்யும் திறன் எல்லாம் கூடி உணவுப் பண்டங்களை அதிகமான சுவை உடையதாக உருவாக்குகிறது. அவர்கள் உபசரித்து உணவு படைக்கின்ற பொழுது, “தேவைக்கு அதிகமாக இலையில் போடுவதை மறுத்தால் அவர்கள் உள்ளம் என்ன பாடுபடுமோ” என்ற எண்ணத்தில் முன்பெல்லாம் உண்டுவிட்டு பின்னர் அவதிக்கு உள்ளாவேன். அவர்கள் மனம் சிறிது நேரம் கூடப் பாடுபடக் கூடாதே என்று விட்டுக் கொடுத்து நான் நெடு நேரம் வேதனைப்படுவேன் & அதிகம் புசித்ததால்.
இப்பொழுதெல்லாம நான் “அவர்கள் மனமும் பாடுபட வேண்டாம், என்னுடைய வயிறும் வேதனையுற வேண்டம் ” என்ற முன்னெச்சரிக்கையில் எனக்குத் தேவையான உணவைக் கண்ணாலே அளந்து கொள்கிறேன். அங்கே எல்லை போட்டு “இதற்கு மேல் இலைக்கு வந்தால் வீணாகிப் போகும் அம்மா” என்று சொல்லி விடுகிறேன். இதுதான் “அளவு” Limitation. “முறை” என்ற இரண்டாவது அம்சம் என்ன? தேவையான அளவு உணவை நன்றாக மென்று, தண்ணீருடன் கலக்க வேண்டுமென்றால் கலந்து, நமக்குப் பழக்கிமில்லாத உணவு என்றால் உண்பதற்கு கொஞ்சம் அதிகநேரம் எடுத்துக் கொண்டு சாப்பிடுவது.
உணவு உட்கொள்வதற்கு நான் கூறியதைப் போலவே, ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அளவு முறை இருக்கிறது. இந்த “அளவு” “முறை” தத்துவத்தை நீங்கள் சரியாகத் தெரிந்து கொண்டு எந்த ஒரு செயலையும் அளவு மீறாமல், அதே நேரத்தில் முறை பிறழாமல் செய்து வரும் போது, அந்தப் பழக்கமே உங்களுக்கு அறிவு வளர்ச்சியைக் கொடுத்து விடும்; விழிப்பு நிலையைக் கொண்டு வரும். இந்த விழிப்பு நிலையானது அயரா நிலையாக வந்து விட்டால் அதுவே தான் ஞானம்; வேறொன்றுமில்லை. அதுவேதான் துறவும் ஆகும்.
நாம் சாப்பிடும்பொழுது, “உணவு சுவையாக இருக்கிறதென்று உட் கொள்ளுகிறோம் அல்லவா, “அது தான் உறவு”. இந்த அளவுக்கு மேலே போனால் வயிறு பாதிக்கப்படும்” என்று கணித்து அதற்கு மேற்பட்ட உணவைத் தள்ளிவிட்டு வருகிறோம் அல்லவா அதுதான் துறவு.
முடிவாக, இந்த “அளவு” “முறை” என்பதை வைத்துக் கொண்டு இந்த உலகத்தையே நீங்கள் ஆளலாம் எனக் கூறி, விளக்கிலே திரியைத் தூண்டிவிடுவது போல், இந்தத் துறையிலே உங்கள் சிந்தனையைத் தூண்டி விட வாய்ப்பு கிட்டியதால் நான் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment